Friday 26 December 2014

மறக்க முடியாத மாமனிதர்கள்.

மறக்க முடியாத மாமனிதர்கள்.

என் வாழ்வில் நான் நிறைய மனிதர்களை பார்த்திருக்கிறேன். அவர்களிடமிருந்து அதிகம் கற்றுகொண்டேன். என்னை சிந்திக்க தூண்டியவர்கள், என் சிந்தனையை மாற்றிப்போட்டவர்கள் என்று பலரும் என் அனுபவங்களில் ஐக்கியமாகிப்போனார்கள்.

என் மனம் மழலையாக இருந்த பொழுது (பள்ளிப்பருவத்தில்) முரட்டுத்தனமாக என்மீது முள் எறிந்தவர்கள் மத்தியில், ஆசிரியர்கள்தான் என்னை அறிவின் மொழி பேசி ஆற்றுப்படுத்தினார்கள். குறுநடை பயின்ற என்னை குட்டுவைத்து ஏறுநடை பயிற்று ஏற்றிவிட்டார்கள். வயிற்று பசியால் நானிருந்த போதெல்லாம் சம்மட்டியால் ஓங்கியடித்து அறிவெனும் அருசுவையூட்டி அமுதுபடைத்தார்கள். வாழ்கையை கற்றுத்தந்து வாழ்த்தி வந்தார்கள்.

அவர்களது நடை, உடை, அறிவு கனிந்த பேச்சு, அன்பு கலந்த  பாசம், எதிர்பார்ப்பு ஏதுமில்லாமல் எடுத்துக்கொண்ட அக்கறை.

நிகழ்காலத்தில் நானாக கடந்தகால அவர்கள்.

ஞான ஒளி.

ஞான ஒளி.



ஞானம் என்பது கண்களை மூடி யாருமற்ற இடத்தில் அமர்ந்து கடவுளிடம் யாசித்து பெரும் வரம் அல்ல. தன் சொந்த அனுபவத்தில், தோல்வியில், வெற்றியில், ஏமாற்றத்தில், காதலில், காமத்தில், போதையில், இன்னும் சொல்ல போனால் வாழ்வின் மேல்மட்ட அனுபவத்தில் இருந்து மட்டுமல்ல எல்லா கீழ்த்தரமான செயல்களிலிருந்தும் கூட நம் மனம் பெற்றுக்கொள்ளும் படிப்பினையே ஞானம் ஆகும்.

இதை அந்ததந்த சூழலில் ஒரு சிப்பி தனக்குள் கொண்ட நீரை முத்தாக பிரசவிக்க தன்மேல் விழும் எல்லா அலைகடலின் அடிகளையும் மௌனமாக சகித்துக்கொள்ளுமே  அவ்வாறே சகித்திருந்து பெறவேண்டிய சக்திதான் ஞானம். யாரும்  தோல்வியை தோளோடு தூக்கித்திரிய ஆசைபடுவதில்லை நம் செயல்களின் மீதே நமக்கேற்படும் அவநம்பிக்கையின் அடையாளங்களாகத்தான் தோளோடு விழுந்த தழும்புகளாய் நம்மை தோல்விகளும் தொற்றிக்கொள்கின்றன.

காமத்திலிருந்து காதலையும் காதலிலிருந்து காமத்தையும் எப்படி பிரிக்க முடியாதோ அப்படி தோல்வியிலிருந்து ஞானத்தையும் ஞானத்திலிருந்து தோல்வியையும் பிரிக்க இயலாது.
ஒருவன் பள்ளிவாசலுக்கு பக்கத்தில் இருந்து விட்டால் மட்டுமே புனிதனாக ஆகிவிட முடியாது. வாழ்கையின் எல்லா நன்மை தீமைக்கும் தன்னை உட்படுத்த வேண்டும் அது அவனை அறிவின் பாதைக்கு ஆற்றுப்படுத்தும்.

இன்று புனிதர் என்று அறியப்படுகிற யாரும் தங்கள் இருதயத்தின் அலமாரிகளை சற்று திறந்து பார்க்க சம்மதித்தால் பாதிக்குமேல் பாவங்களின் பழைய படிமங்களை காணலாம். ஆனால் ஓன்று நிச்சயம் நம் எல்லா அனுபவமும் நம்மை, கடலின் மீதுள்ள கலமாக கடவுளிடம் கொண்டு சேர்க்கவேண்டும் அதுதான் முக்கியம்.









உரிமை. வெங்கடேசன்.